பஸ்கள் மோதல்; 25 பேர் காயம்

சுரண்டை அருகே பஸ்கள் மோதிய விபத்தில் மாணவ-மாணவிகள் உள்பட 25 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-03-14 20:49 GMT
சுரண்டை:
சுரண்டை அருகே பஸ்கள் மோதிய விபத்தில் மாணவ-மாணவிகள் உள்பட 25 பேர் காயமடைந்தனர்.

பஸ்கள் மோதல்
சங்கரன்கோவிலில் இருந்து வீரசிகாமணி வழியாக சுரண்டைக்கு அரசு டவுன் பஸ் நேற்று காலையில் புறப்பட்டு சென்றது. இதேபோல் புளியங்குடியில் இருந்து அருணாசலபுரம், வீரசிகாமணி வழியாக சுரண்டைக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்களில் சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் பயணம் செய்தனர். இரு பஸ்களும் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தது.
சுரண்டை அருகே குலையநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, முன்னால் சென்ற அரசு டவுன் பஸ் மீது, பின்னால் வந்த அரசு டவுன் பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.

25 பேர் காயம்
இந்த விபத்தில் பஸ்களில் இருந்த 12 மாணவ-மாணவிகள் உள்பட 25 பேர் காயமடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக குலையநேரி, சுரண்டை, வீரகேரளம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த மாணவிகள், ஐஸ்வர்யா, முத்துகாவியா, மல்லிகா, மனோகரி, ஆதிலட்சுமி, மாணவர் வேல்சாமி, பேராசிரியர் வைரவன் ஆகிய 7 பேரையும் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவர்களான தேவர்குளத்தைச் சேர்ந்த தர்மராஜ் (வயது43), திருவேங்கடம் அருகே சங்குபட்டியைச் சேர்ந்த காளிமுத்து (54) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவர்களை பழனி நாடார் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

மேலும் செய்திகள்