அமெரிக்காவில் ரூ.7.10 கோடி பிட்காயின் மோசடி வழக்கில் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு தொடர்பு?
அமெரிக்காவில் ஒரு தம்பதி ரூ.7.10 கோடி பிட்காயின் மோசடி செய்த வழக்கில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணாவுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பெங்களூரு:
பிரபல ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணா
பெங்களூருவில் அரசு இணையதளங்களை முடக்கியதாக பிரபல ஹேக்கரான ஸ்ரீகிருஷ்ணா என்ற ஸ்ரீகியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல நிறுவனங்களின் இ-மெயில் முகவரியை முடக்கி பிட் காயின் திருடியதும் தெரியவந்தது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சில நிறுவனங்களின் இ-மெயிலையும் ஸ்ரீகிருஷ்ணா முடக்கி இருந்தார். இந்த வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஸ்ரீகிருஷ்ணா ஜாமீனில் வெளியே வந்தார்.
கர்நாடகத்தில் பிட்காயின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணா தலைமறைவாகி விட்டார். தற்போது அவரை பற்றிய எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையில், அமெரிக்காவிலும் பிட்காயின் மோசடி சம்பவம் நடந்திருந்தது. அதாவது கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தம்பதி, பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் சில நிறுவனங்களின் இ-மெயில் உள்ளிட்ட இணையதளங்களை முடக்கி இந்திய மதிப்பில் ரூ.7 கோடியே 10 லட்சம் மதிப்பிலான பிட்காயினை எடுத்து மோசடி செய்திருந்தார்கள்.
ரூ.7.10 கோடி மோசடி
இதுகுறித்து அமெரிக்க போலீசாா் நடத்திய விசாரணையில், ரூ.7.10 கோடி பிட்காயின் மோசடியில் இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக தெரிகிறது. அதாவது பிட்காயினை ரூபாயாக மாற்ற அந்த தம்பதி இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் இ-மெயிலை பயன்படுத்தி இருப்பதை அமெரிக்க போலீசார் கண்டுபிடித்திருந்தனர். அதுபற்றி கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் அமெரிக்க போலீசார் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக அமெரிக்காவில் கைதான தம்பதி பிட்காயின் மோசடியில் ஈடுபட்டதில், பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதே நேரத்தில் அமெரிக்காவில் நடந்த பிட்காயின் முறைகேடு தொடர்பாக அந்த நாட்டு போலீசார், இந்தியாவுக்கு வரலாம் என்றும், இல்லையெனில் இந்திய போலீசாரின் உதவியை நாடலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.