பஸ்களில் இலவச பயணிக்க அனுமதிக்க வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் மனு
பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா முன்னிலை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணசேகரன், கூடுதல் நேர்முக உதவியாளர் ஷேக் அப்துல்காதர், மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர் பிரான்சிஸ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உட்பட 315 மனுக்கள் பெறப்பட்டன.
தென்காசி மாவட்டத்திலுள்ள கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கொடுத்துள்ள மனுவில், “பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதிச்சீட்டு பெற்று நெல்லை மாவட்டம் முழுவதும் பஸ்சில் பயணம் செய்து வந்தோம். தற்போது நெல்லை மாவட்டம் பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போது எங்களால் தென்காசி மாவட்டத்திலுள்ள பஸ்களில் மட்டுமே இலவசமாக பயணம் செய்ய முடிகிறது. எங்களில் பலர் நெல்லையில் வேலை மற்றும் சுயதொழில் செய்து வருகிறோம். தற்போது எங்களால் அங்கு சென்று தொழிலில் ஈடுபட முடியவில்லை. எனவே எங்களுக்கு தென்காசி மாவட்டம் மற்றும் நெல்லை ஆகிய இரு மாவட்டங்களிலும் இலவசமாக பஸ்களில் பயணம் செய்ய அனுமதியளிக்க கேட்டுக்கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் கொடுத்துள்ள மனுவில், “மாவட்ட பஞ்சாயத்து நிதியினை திட்டப் பணிகளுக்கு அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி பிரித்துக் கொடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.