தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-14 20:23 GMT
திறந்தவெளி கழிவுநீர்கால்வாய்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் திறந்தநிலையில் உள்ளது. இதன்மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்தொற்றுகளும் ஏற்படுகின்றது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதிைய கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி கழிவுநீர் கால்வாயை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிலால், இளையான்குடி.

போக்குவரத்து நெரிசல்
மதுரை ஆரப்பாளையம் டி.டி.ரோட்டிலிருந்து குரு தியேட்டர் சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றது.  வாகன நெரிசலில் சிக்கி  இருசக்கர வாகனங்களும், பஸ்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இப்பகுதியில் சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
மனோகரன், ஆரப்பாளையம்.

புதிய சாலை திறக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம்  வத்திராயிருப்பில் இருந்து வருசநாடு செல்வதற்காக புதிய சாலை அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றது. ஆனால் அந்த சாலை பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மாற்றுபாதையில் பல கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை போக்குவரத்திற்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மாரிமுத்து, விருதுநகர்

சுற்றுலா பயணிகள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரோடு பாலத்தின் நடைபாதையின் கான்கிரீட் கற்கள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்னர் அதிகாரிகள் நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, ராமநாதபுரம். 

பயணிகள் நிழற்குடை தேவை
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு எல்.ஐ.சி. பஸ் நிறுத்தத்தில் தினந்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இங்கு வரும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.

வேகத்தடை வேண்டும் 
சிவகங்கை மாவட்டம் கல்லல் இந்திராநகர் பஸ் நிறுத்தம் பகுதியில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வேகத்தடை இல்லாத காரணத்தினால் ஒரு சிலர் அதிக வேகத்தில் இப்பகுதியை கடந்து செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுவதோடு போக்குவரத்தும் பாதிக்கப்படுகின்றது. ஆதலால் வாகன ஓட்டிகள் அச்ச உணர்வுடனே சாலையை கடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகளின் நலன் கருதி வேகத்தடை அமைக்கப்படுமா? 
பொதுமக்கள், சிவகங்கை.

கொசு தொல்லை
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் கொசு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொசுக்கடியால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பெருகிவரும் கொசுக்களால் மலேரியா, ெடங்கு போன்ற நோய் தொற்றுகளும் ஏற்படுகின்றது. எனவே கிராமம் முழுவதும் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
மாஸ்கோ, தம்பிபட்டி.

மூடப்படாத பள்ளம் 
மதுரை சர்வேயர் காலனி பாண்டியன் நகர் பகுதியில் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் பெயர்ந்து கிடக்கும் கற்களால் நடக்க முடியாமல் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெய்கணேஷ், மதுரை. 

குடிநீர் வினிேயாகம்
 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் பாண்டுகுடி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பாண்டுகுடி, கோடனூர், அஞ்சுகோட்டை, திருவாடானை, ஆதியூர், கல்லூர் உள்பட பல ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களிலும் குடிநீர் விநியோகம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
ராஜூ, திருவாடானை. 

மேலும் செய்திகள்