மீன்பிடிக்க விரித்த வலையில் 3 மலைப்பாம்புகள் சிக்கின
விக்கிரமசிங்கபுரத்தில் கால்வாயில் மீன்பிடிக்க விரித்த வலையில் 3 மலைப்பாம்புகள் சிக்கின. அதை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரத்தில் கால்வாயில் மீன்பிடிக்க விரித்த வலையில் 3 மலைப்பாம்புகள் சிக்கின. அதை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கால்வாய்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மீனாட்சிபுரத்தில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் மழைக்காலம் தவிர மற்ற நேரங்களிலும் தண்ணீர் இருக்கும். பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீரும் தற்போது இந்த கால்வாய் வழியாகத்தான் செல்கிறது.
வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் வலைவிரித்து மீன்பிடிப்பார்கள். இதே போல் நேற்று முன்தினம் மீன் பிடிப்பதற்காக சிலர் வலையை விரித்து கட்டி இருந்தனர்.
பாம்புகள் சிக்கின
நேற்று காலையில் சென்று வலையை இழுத்தனர். அது இழுப்பதற்கு கடினமாக இருந்தது. எனவே, பலம் கொண்டு இழுத்தனர். அப்போது அதில் பாம்புகள் சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பார்த்தபோது அதில் 3 மலைப்பாம்புகள் இருந்ததை பார்த்து திடுக்கிட்டனர். இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். வலையில் சிக்கிய மலைப்பாம்புகளை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பின்னர் இதுபற்றி அப்பகுதி மக்கள், வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்கள் அதிர்ச்சி
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு வந்தனர். வன ஆர்வலர்கள், வனத்துறையினருடன் இணைந்து வலையில் சிக்கிய 3 மலைப்பாம்புகளை மீட்டனர். அந்த பாம்புகள் ஒவ்வொன்றும் சுமார் 5 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பிடிபட்ட 3 மலைப்பாம்புகளையும் பாபநாசம் வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்தனர்.
கால்வாயில் மீன்பிடிக்க விரித்த வலையில் மலைப்பாம்புகள் சிக்கியது பற்றி அந்த பகுதி மக்கள் பரபரப்பாக பேசிக்கொண்டனர். மேலும் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் பகுதியில் உள்ள இந்த கால்வாயில் ஒரே வலையில் 3 மலைப்பாம்புகள் பிடிபட்டதை நேரில் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.