கருணை கொலை செய்யுமாறு ஆசிரியரின் மகன் குடும்பத்துடன் மனு

கருணை கொலை செய்யுமாறு ஆசிரியரின் மகன் குடும்பத்துடன் மனு கொடுத்தார்.

Update: 2022-03-14 19:31 GMT
பெரம்பலூர்:

குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது பெரம்பலூர் நான்கு ரோடு துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்த ஆசிரியர் முத்துசாமியின் மகன் கணேசன் (வயது 39) என்பவர் தனது மனைவி, மகள், மகனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, தங்களை கருணை கொலை செய்யக்கோரி ஒரு மனு கொடுத்தார்.
கருணை கொலை
அந்த மனுவில், எனது தந்தை இறந்த பிறகு தாயிடம் சில பிரச்சினைகள் குறித்து நான் தட்டிக்கேட்டதால், தாயுடன் சேர்ந்து எனது 2 சகோதரிகளும் என் மீது வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் பொய் புகார் கொடுத்தனர். இதனால் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளை விசாரித்து தீர்வு காணாமல் நான் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றேன். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். மேலும் தாயின் தோழி மற்றும் தந்தையின் நண்பர்கள், உறவினர்கள் வழியிலும் நான் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறேன். இதனால் என்னால் வாழ முடியவில்லை. எனவே என்னையும், எனது மனைவி, 2 குழந்தைகளையும் கருணை கொலை செய்து விடுங்கள். இல்லையென்றால் என் மீது உள்ள பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு கண்டு என்னையும், எனது குடும்பத்தையும் வாழ வையுங்கள், என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்