பக்தர்களின் கைகளில் கைப்பாரமாக வலம் வந்த முருகப்பெருமான்
பக்தர்களின் கைகளில் கைப்பாரமாக முருகப்பெருமான் வலம் வந்தார்
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்று வரும் பங்குனி பெருவிழாவில் பக்தர்களின் கைகளில் கைப்பாரமாக முருகப்பெருமான் வலம் வந்தார்.
பங்குனி பெருவிழா
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களிலேயே பங்குனி பெருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழா தொடர்ந்து வருகின்ற 23-ந்தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று கைப்பார நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி மேலரதவீதி சந்திப்புக்கு கோவிலில் உள்ள வாகனங்களிலேயே அதிக எடை கொண்ட வெள்ளியிலான யானை வாகனம் கொண்டுவரப்பட்டது. முருகப்பெருமான் தெய்வானையுடன் வெள்ளி யானை வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதனையடுத்து யானை வாகனத்துடன் முருகப்பெருமானை சீர் பாதங்கள் மற்றும் பக்தர்கள் தங்களது உள்ளங்கைகளில் கைப்பாரமாக தலைக்கு மேல் தூக்கினர்.
கைகளில் வலம் வந்த முருகன்
மேலரதவீதியில் இருந்து கீழரதவீதியை நோக்கி கோவில் வாசல்வரை முருகப்பெருமானை கைகளில் சுமந்தபடி சென்றனர். இதேபோல கோவில் வாசலில் இருந்து மேலரதவீதியின் சந்திப்பான கொத்தாளம் வரையிலுமாக சுவாமியை கைகளில் சுமந்து வந்தனர். பொதுவாக திருவிழாக்களில் வாகனங்களில் எழுந்தருளக்கூடிய சுவாமி வண்டிகள் மூலம் நகர் உலா வரும்.
ஆனால் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழாவின் 5-ம் நாள் மட்டுமே பக்தர்களின் உள்ளங்கைகளில் சுவாமி எழுந்தருளுவது குறிப்பிடத்தக்கது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகின்ற 18-ந்தேதி பங்குனி உத்திரம், 20-ந்தேதி பட்டாபிஷேகம், 21-ந்தேதி திருக்கல்யாணம், 22-ந்தேதி கிரிவலப்பாதையில் மகாதேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.