முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி மனைவியை கொடூரமாக கொன்று மீன்பிடி தொழிலாளி தற்கொலை
முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி மனைவியை கொடூரமாக கொன்று மீன்பிடி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். கழுத்து அறுபட்ட நிலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்,
முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி மனைவியை கொடூரமாக கொன்று மீன்பிடி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். கழுத்து அறுபட்ட நிலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவிலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கணவரை பிரிந்தார்
நாகர்கோவில் கோட்டார் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கேசவன் மனைவி வனஜா (வயது 32). இவர்களுக்கு மஞ்சு (13) மற்றும் அக்ஷரா (12) என்ற 2 மகள்கள் உள்ளனர். நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 8 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேசவனுக்கும், வனஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
2-வது திருமணம்
அந்த சமயத்தில் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவரான ஜோஸ் கான் பியர் (47) என்பவருடன், வனஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தி திருமணம் வரை சென்றது. ஜோஸ்கான்பியரை, வனஜா 2-வதாக மணமுடித்தார். பிறகு ஜோஸ்கான்பியர், மனைவி வனஜா, 2 குழந்தைகளுடன் நாகர்கோவில் செட்டித்தெருவில் வசித்து வந்தார்.
இதற்கிடையே வேலைக்காக ஜோஸ் கான்பியர் வெளிநாட்டிற்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டார். இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் வெளிநாட்டில் இருந்து அவர் நாகர்கோவிலுக்கு வந்தார். பிறகு அவர் வேலைக்கு செல்லவில்லை. மனைவி, குழந்தைகளுடன் வீட்டிலேயே வசித்து வந்தார்.
வெட்டுக்காயத்துடன் சிறுமி...
இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்து பதறியடித்தபடி கழுத்தில் ரத்த காயத்துடன் மூத்த மகள் மஞ்சு வெளியே ஓடி வந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அப்போது சிறுமி பதற்றத்துடன் அம்மாவை, அப்பா கொன்று விட்டு கட்டிலுக்கு அடியில் பிணத்தை வைத்திருப்பதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர் மற்றும் வனஜாவின் உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
கணவன்-மனைவி பிணங்கள்
அங்குள்ள ஒரு அறையில் இருந்த கட்டிலின் கீழ் வனஜா அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். முகம் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு இருந்தது. அறை முழுவதும் துர்நாற்றம் வீசியபடி இருந்தது. மேலும் அந்த அறையில் சிறுமி அக்ஷரா மயக்கமான நிலையில், வாய்க்குள் துணி அமுக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் துணியை அவிழ்த்து அக்ஷராவை மீட்டனர்.
தொடர்ந்து மற்றொரு அறையை திறந்து பார்த்த போது அங்கு ஜோஸ் கான் பியர் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்தார். அடுத்தடுத்து 2 பிணங்களை பார்த்த அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இது குறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக தூக்கில் தொங்கிய ஜோஸ் கான் பியர் மற்றும் கொலை செய்யப்பட்ட வனஜா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கழுத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்ட மூத்த மகள் மஞ்சுவும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
திடுக்கிடும் தகவல்கள்
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, ஜோஸ் கான்பியர் மற்றும் வனஜாவிற்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 12-ந் தேதி சனிக்கிழமை அன்று காலையில் அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வனஜா கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். பிறகு மதியம் வீடு திரும்பினார்.
எனினும் அவர் கணவருடன் ஒத்துப்போகவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஜோஸ்கான்பியருக்கு, வனஜா மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை கொலை செய்யும் எண்ணம் உருவானது.
இதற்காக வனஜாவிடம் நைசாக பேசி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். இதில் சற்று மயக்க நிலைக்கு அவர் சென்றார்.
ஆசை பட பாணியில் கொலை
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வனஜாவை ஜோஸ்கான் பியர் கடுமையாக தாக்கியதோடு ஆசை பட பாணியில் முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி மூச்சை திணறடித்து கொன்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு மஞ்சுவும், அக்ஷராவும் வந்துள்ளனர். இருவரும் வீட்டுக்குள் தாயை தேடினர். ஆனால் அவரை காணவில்லை. உடனே தந்தையிடம் தாயை பற்றி கேட்ட போது அவர் ஒழுங்காக பதில் சொல்லவில்லை.
பிறகு கட்டிலுக்கு அடியில் சென்று பார்த்த போது தாய் பிணமாக கிடப்பதை பார்த்து திடுக்கிட்டனர். அம்மாவுக்கு என்னாச்சு, என்னாச்சு என பதற்றம் அடைந்து சத்தம் போட தொடங்கினர்.
பிணத்துடன் வசித்தார்
மகள்களின் சத்தத்தால் போலீசில் மாட்டிக் கொள்வோம் என பயந்த ஜோஸ்கான்பியர், இருவரின் கை, கால்களை கட்டி வாய்க்குள் துணியை அமுக்கியுள்ளார்.
பிறகு கடந்த 2 நாட்களாக ஜோஸ்கான்பியர் வீட்டுக்குள் செய்வதறியாது திகைத்தபடி வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளார். கொலை செய்த மனைவியின் பிணத்துடன் அவர் பித்து பிடித்தாற் போல் இருந்ததாக தெரிகிறது. அதே சமயத்தில் 2 மகள்களும் சாப்பாடு, தண்ணீர் இன்றி தவியாய் தவித்துள்ளனர்.
போலீசுக்கு பயந்து தற்கொலை
ஒரு கட்டத்தில், மனைவியை கொலை செய்த நாம் எப்படியும் போலீசில் சிக்கி விடுவோம், எனவே இனிமேல் தப்பிக்க முடியாது என உணர்ந்த ஜோஸ்கான்பியர் நேற்று அதிகாலையில் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.
இந்தநிலையில் மூத்த மகள் மஞ்சுவின் கை, கால்களில் கட்டப்பட்ட துணி அவிழ்ந்துள்ளது. பிறகு அவர் வெளியே வந்து சத்தம் போட்ட பிறகு தான் சிறுமியின் தாய் கொலை செய்யப்பட்டதும், தந்தை தற்கொலை செய்த அதிர்ச்சி தகவலும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. தாயார் பிணத்தை பார்த்த போது சிறுமி மஞ்சு சத்தம் போட்ட போது கழுத்தில் கத்தியை வைத்து ஜோஸ்கான்பியர் மிரட்டியுள்ளார். அப்போது கத்தி லேசாக பட்டதால் சிறுமிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கொன்று பிணத்துடன் வசித்த மீன்பிடி தொழிலாளி போலீசுக்கு பயந்து தற்கொலை செய்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.