அரசு கலை-அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அரசு கலை-அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது

Update: 2022-03-14 19:10 GMT
கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதியில் கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 5-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி முதல்வரும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான திருச்செல்வம் கலந்துகொண்டு 245 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், இங்கு பட்டம் பெற்ற மாணவர்கள் இத்துடன் படிப்பு முடிந்து விட்டதாக நினைக்கக்கூடாது. முன்னாள் முதல்- அமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரை போல் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். கல்வி மட்டுமே அழியாத செல்வம். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அதிகமாக மாணவர்களை சந்தித்து உரையாற்றினார். இங்கு பட்டங்களை பெற்றிருக்கும் பட்டதாரிகள் கிராம புறத்தைச் சேர்ந்தவர்கள். கிராமத்தில் பிறந்து வளர்ந்த மாணவர்களுக்குதான் இயல்பாகவே அறிவும், அனுபவமும், ஆற்றலும் அதிகமாக இருக்கும். நானும் உங்கள் கல்லூரி முதல்வரும், கிராமத்தில் பிறந்தவர்கள் தான். எங்களைவிட நீங்கள் பெரிய அளவில் படித்து இந்த நாட்டுக்கு தொண்டு செய்ய வேண்டும். வருங்காலத்தில் பொிய அறிஞர்களாக, ஆட்சியாளர்களாக வளர வேண்டும் என கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்