குமரி மாவட்டத்தில் 60 போலி முகநூல் கணக்குகள் முடக்கம்
குமரி மாவட்டத்தில் 60 போலி முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் 60 போலி முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் பஸ்கள், ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி, பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் ஏராளமாக வருகின்றன. இது தொடர்பாக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவே இதில் பாதிக்கப்படக்கூடிய பொதுமக்கள் உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்க..
தகவல் தொழில்நுட்பங்களை சில கும்பல் தவறாக பயன்படுத்தி மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்து வருகிறார்கள். அந்த வகையில் போலி இணையதள முகவரி, போலி திருமண தகவல் மையம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவது, செல்போன்களில் போலி விளம்பரங்கள், வங்கியில் கடன் பெற்று தருவது மற்றும் குலுக்கல் முறையில் இலவச பரிசு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நவீன முறையில் குற்றங்கள் நடக்கின்றன.
சமீபத்தில் கூட நைஜீரிய வாலிபர் ஒருவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மற்றும் அவரது பாட்டியிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்துள்ளார். இந்த வழக்கு கடந்த 1½ ஆண்டுகளாக ரகசிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சைபர் கிரைம் மோசடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுதொடர்பான புகார்களை மக்கள் தைரியமாக போலீஸ் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும்.
60 போலி முகநூல் கணக்குகள்
சைபர் குற்றங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 60 போலி முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மேற்பார்வையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தினமும் குறைந்தபட்சம் 100 நபர்களை சந்தித்து, இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 80 சதவீத மக்களிடம் இந்த விழிப்புணர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வில்லியம் பெஞ்சமின், வசந்தி, திருமுருகன், அருண், பெர்னார்டு சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.