ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 17 வீடுகள் அகற்றம்

விழுப்புரம் அருகே ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 17 வீடுகள் நேற்று அகற்றப்பட்டன.

Update: 2022-03-14 19:00 GMT
விழுப்புரம், 

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் ஏரிக்கரையை ஆக்கிரமித்து 17 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 17 வீடுகளை அகற்றும்படி  உத்தரவிட்டது.
 இதையடுத்து நேற்று விழுப்புரம் கோட்டாட்சியர் (பொறுப்பு) பெருமாள் தலைமையில் தாசில்தார் ஆனந்தகுமார், மண்டல துணை தாசில்தார் லட்சாதிபதி, வருவாய் ஆய்வாளர் சிவமூர்த்தி உள்ளிட்டோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், இளங்காடு கிராமத்திற்கு சென்றனர்.
பின்னர் அங்கு ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து அகற்றும் பணியை தொடங்கினர். அப்போது வீடுகளை இடிக்கும்போது அதற்கு முன்பாக ஏரிக்கரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை இடிக்காமல் விட்டுவிட்டு வீடுகளை மட்டும் அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். மேலும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவருக்கு சொந்தமான அந்த கோவிலை இடித்துவிட்டு வீடுகளை இடிக்க வேண்டுமென கூறி வாக்குவாதம் செய்ததோடு பொக்லைன் எந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து அந்த ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்யப்பட்டு அங்கிருந்த சாமி சிலை தனியாக வெளியே எடுக்கப்பட்டது. அதன் பிறகு பொக்லைன் எந்திரம் மூலம், அந்த கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 17 ஆக்கிரமிப்பு வீடுகளையும் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றத்தையொட்டி அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வளவனூர் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்