மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த மூதாட்டி சாவு
மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
தரகம்பட்டி
தரகம்பட்டி அருகே உள்ள சிந்தாமணிப்பட்டி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பால்நடைப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி சிட்டு (61). இவர் சொந்த வேலையாக பாளையத்திற்கு சென்றார். பின்னர் திரும்பி ஊருக்கு அதே பகுதியை சேர்ந்த ரெங்கசாமி (55) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சீத்தப்பட்டி அருகே வந்தபோது கிழக்கில் இருந்து பாளையம் நோக்கி பாலவிடுதி கிராமம் சிங்கம்பட்டியை சேர்ந்த மணிவேல் (25) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து, சிட்டு, ரெங்கசாமி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் சிட்டு, ரெங்கசாமி, மணிவேல் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த சிட்டு, ரெங்கசாமி ஆகியோரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மணிவேலை மீட்டு கரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிட்டுவின் மகன் ரவி கொடுத்த புகாரின்பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.