க.பரமத்தி,
தென்னிலை அருகே குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 65). இவர் தென்னிலை அருகே பட்டக்காரர் தோட்டத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரது தோட்டத்தில் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி மாலை தோட்ட வேலை செய்து முடித்து விட்டு வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. நேற்று தோட்டத்து வேலைக்கு வராததால் ராஜாமணி அவரை தேடி உள்ளார். இந்தநிலையில் நேற்று மாலை தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே ரங்கசாமியின் வேட்டி, துண்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகப்பட்டு வெள்ளகோவில் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரங்கசாமியை தேடினர். பின்னர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ரங்கசாமி பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடலை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜாமணி தென்னிலை போலீசாரிடம் கொடுத்த புகாரின்பேரில், தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து அவர் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.