தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
உபயோகம் இன்றியுள்ள கியாஸ் அடுப்பு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி சமையல் கூடத்திற்கு கியாஸ் அடுப்பு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை எரிவாயு உருளை வழங்கவில்லை. இதனால் விறகு அடுப்பில் சமைத்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராயப்பன், மருவத்தூர், பெரம்பலூர்.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
கரூர் மாவட்டம், க.பரமத்தி மொஞ்சனூர் வைரமடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் செடி கொடிகள் வளர்ந்து மின்கம்பத்தை ஆக்கிரமித்து படர்ந்து இருந்தது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தில் படர்ந்து இருந்த செடி கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், வைரமடை, கரூர்.
புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுமா?
கரூர் மாவட்டம் குளித்தலை நகரிலிருந்து லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர் ரெயில் நிலையம் புதிய காவிரி பாலத்தின் வழியாக காட்டுப்புத்தூர், மோகனூர் வரை புதிய நகர பஸ்கள் மற்றும் நாமக்கல் வரை புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டால் கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்கள் பெரிதும் பயனடைவார்கள். எனவே இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுந்தர், குளித்தலை, கரூர்.
தார்சாலை வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் பாப்பாபட்டி ஊராட்சியை சேர்ந்த வடுவக்கோன்தெரு சாலை மண் சாலையாக உள்ளது. இதனால் வெயில் நேரத்தில் இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதும், மழை பெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக மாறுவதும் வழக்கமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த மண் சாலையை தார்சாலையாக மாற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சேக் பகுர்தீன், அருத்தோடிப்பட்டி, புதுக்கோட்டை.
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி கும்பக்குடி பஞ்சாயத்து அண்ணாநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படுவதுடன் அப்பகுதியில் உள்ள வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் சேதம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அண்ணாநகர், திருச்சி.
எரியாத மின் விளக்குகள்
திருச்சி திருவானைக்காவல் போலீஸ் செக்போஸ்ட் அருகில் இருந்து கொள்ளிடம் பாலம் வரை இருபுறம் உள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. மேலும் அப்பகுதியில் மதுபான கடை உள்ளதால் இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விக்னேஸ்வரன், பிச்சாண்டார் கோவில், திருச்சி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா மல்லியம்பத்து ஊராட்சி பி.எஸ்.எஸ். நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் அப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பி.எஸ்.எஸ்.நகர், திருச்சி.
பயன்பாட்டிற்கு வராத பொதுக்கழிவறை
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்திலுள்ள வெங்கடாசலபுரம் ஊராட்சி புடலாத்தியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொதுக்கழிவறைகள் கட்டப்பட்டன. இந்த கழிவறைகள் கட்டப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புடலாத்தி, திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் கல்லக்குடி-பாடாலூர் தேசிய நெடுஞ்சாலையில் தாப்பாய் உப்பு ஓடை அருகே சாலை சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கல்லக்குடி, திருச்சி.