வெண்ணாற்று பாலப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
பழையநீடாமங்கலம்- வையகளத்தூர் இடையே வெண்ணாற்று பாலப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம்;
பழையநீடாமங்கலம்- வையகளத்தூர் இடையே வெண்ணாற்று பாலப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெருக்கடி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் வையகளத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற பள்ளி மாணவ- மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்கள் வையகளத்தூர் ரயில்வே பாலத்தை கடந்து நீடாமங்கலம் மற்றும் வெளியூர்களுக்கு சென்று வரவேண்டிய நிலை உள்ளது. இதைப்போல நாகை- மைசூர்தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள நீடாமங்கலத்தில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பாலம்
குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், பணிக்கு செல்லும் அலுவலர்கள், வெளியூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மற்ற ஊர்களுக்கு செல்லும் பொது மக்கள் தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். எனவே பழைய நீடாமங்கலம்- வையகளத்தூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்ட அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
விரைவில் முடிக்க கோரிக்கை
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நீடாமங்கலம் அருகில் மன்னை சாலையில் உள்ள தட்டி தெரு- கொத்தமங்கலம் இடையே கோரையாற்றில் இணைப்பு பாலமும், பழைய நீடாமங்கலம் வையகளத்தூர் இடையே வெண்ணாற்றில் இணைப்பு பாலமும் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆற்றில் தண்ணீர் இருந்ததால் பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது வெண்ணாற்றில் தண்ணீர் இல்லாததால் அந்த ஆற்றில் பாலம் கட்டும் பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடங்கி பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.