மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த அக்கா, தங்கை
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அபகரித்த நிலத்தை மீட்டு தரக்கோரி மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த அக்கா, தங்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்தனர். அப்போது கொத்தட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மனைவி லலிதா (வயது 55), இவரது தங்கையும், கலியபெருமாள் மனைவியுமான சிவகாமசுந்தரி (50) ஆகிய 2 பேரும் கையில் மண்எண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்களை போலீசார் சோதனை செய்த போது, இருவரும் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் கண்ணீர் மல்க கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், தங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை உறவினர் ஒருவர் அவரது பெயரில் பட்டா மாற்றம் செய்து, நிலத்தை அபகரித்து விட்டதாகவும், இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும், இது பற்றி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.ஆகவே எங்களிடம் இருந்து அபகரித்த நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.