திறன்மேம்பாட்டு பயிற்சி மைய பட்டமளிப்பு விழா
காரைக்குடி அருகே திறன்மேம்பாட்டு பயிற்சி மைய பட்டமளிப்பு விழா நடந்தது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள ராஜராஜன் என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள ஜெய்ராம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் படித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெற்றது. ஜெய்ராம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் 35 திறன் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதில் வருடம் தோறும் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று பயன் அடைகின்றனர்.
மொபைல் ஆப் டெவலப்மென்ட் அண்ட் வெப்டிசைன், சைபர் செக்யூரிட்டி, ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், எலக்ட்ரிக்கல் ஆட்டோ காட் கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங், ரோபோடிக்ஸ் போன்ற பல திறனை மேம்படுத்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
பட்டமளிப்பு விழாவிற்கு ராஜராஜன் கல்வி குழுமத்தின் ஆலோசகர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் சுப்பையா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், மாணவர்கள் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றிருந்தாலும் தொழில் நிறுவனங்களில் சேருவதற்கு இதுபோன்ற டிப்ளமோ மற்றும் சான்றிதழ் வகுப்புகளை வைத்துதான் திறன் மேம்பாடு உடைய மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்கின்றனர் என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஐ.இ.சி.டி. இயக்குனர் ராம் கணேஷ் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகள் இடையே தற்போது அதிக இடைவெளி உள்ளது. எனவே மாணவர்களுக்கு இந்த தொழில் துறை சார்ந்த வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தற்போது உலகம் இந்தியாவிடம் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துள்ளது. ஏனென்றால் உலகிலேயே இந்தியாவில்தான் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். இந்த திறன் சார்ந்த வகுப்புகள் எதிர்காலத்தில் ஒரு சுய தொழில் செய்வதற்கோ அல்லது ஒரு தொழில் துறைசார்ந்த வேலைக்கு செல்வதற்கோ மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.
தேர்வில் வெற்றி பெற்ற் 688 மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஜெய் ராம் திறன் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் சுரேஷ் நன்றி கூறினார்.