அவினாசி-
அவினாசி அருகே தெக்கலூர், புதுப்பாளையம், கோதபாளையம் உள்ளிட்ட காட்டு பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளன. தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டதால் தண்ணீர் மற்றும் உணவுக்காக அவ்வப்போது மான்கள் அக்கம்பக்கம் உள்ள தோட்டப்பகுதிகளுக்கு வருகின்றன. இந்த நிலையில் நேற்று 2 வயது மதிக்கதக்க ஒரு ஆண்மான் தெக்கலூர் ஏரிப்பாளையம் சேடந்தோட்டம் பகுதிக்கு வந்துள்ளது அப்போது மானைப் பார்த்த தெருநாய்கள் மானை துரத்தி கடித்துள்ளன. இதனால் பயந்துபோன மான் நாய்களின் பிடியிலிருந்து தப்பி ஓடியதில் கம்பிவலையில் சிக்கி படுகாயமடைந்தது.
இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த சண்முகம் உள்ளிட்ட சிலர் தெருநாய்களை துரத்திவிட்டு மானை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் மான் செத்து விட்டது. எனவே அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் செத்துக் கிடந்த மானின் உடலை மருத்துவ பரிசோதனை செய்து புதைத்தனர்.