நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
நல அலுவலகத்தை தரைதளத்தில் அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது 3 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி அளித்தார்.
நாமக்கல்:-
நல அலுவலகத்தை தரைதளத்தில் அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது 3 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி அளித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கலெக்டர் அலுவலகத்தின் தரை தளத்தில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தில் மாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்துடன் பழைய இடத்திலேயே மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் பழைய இடத்திற்கே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறன் உடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகள் ஒரு வாரத்தில் இடமாற்றம் செய்து தருவதாக கூறியதாக தெரிகிறது. ஆனால் இதுவரை மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் பழைய இடத்திற்கோ அல்லது கலெக்டர் அலுவலகத்தி்ன் தரை தளத்திற்கோ இடமாற்றம் செய்யப்படவில்லை.
காத்திருப்பு போராட்டம்
இந்தநிலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாற்றுத்திறன் உடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருகன் தட்சிணாமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 3 நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தரைதளத்துக்கு மாற்றி தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் வீடு திரும்பினர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
11 அம்ச கோரிக்கைகள்
பின்னர் மாற்றுத்திறன் உடையோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தரை தளத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கால் தாங்கி, செயற்கை கால் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்த வேண்டும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வருவதற்கு லிப்ட் வசதி செய்ய வேண்டும். வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது என்றனர்.