ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்தது
தீவனப்புல்லில் மின்கம்பி உரசியதால் ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனால் ராசிபுரம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
ராசிபுரம்
தீவனப்புல்லில் மின்கம்பி உரசியதால் ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனால் ராசிபுரம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
தீவனப்புல் ஏற்றி வந்த லாரி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து தீவனப்புல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல் மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வந்துகொண்டிருந்தது. கவுண்டம்பாளையம் அருகே வந்த போது லாரியின் மேல்புறத்தில் இருந்த தீவனப்புல்லில் மின்கம்பி உரசியது. இதில் தீவனப்புல் தீப்பற்றி எரிந்தது.
இதனை கவனிக்காத டிரைவர் விக்னேஷ் (வயது 28) லாரியை ஓட்டி சென்றார். சாலையோரம் நின்றவர்கள், லாரி தீப்பிடித்து எரிகிறது என்று சத்தம் போட்டனர். அதன்பிறகு அதனை பார்த்த டிரைவர் விக்னேஷ் லாரியை சாலையோரம் உள்ள வயல்வெளியில் லாரியை இறக்கினார்.
முற்றிலும் எரிந்து சேதம்
லாரியில் இருந்த தீவனப்புல் மளமளவென பற்றி எரிந்தது. லாரியும் முழுவதுமாக எரிந்து நாசமாகியது. இதுபற்றி ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி சரவணன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இருப்பினும் தீவன புல் மற்றும் லாரி எரிந்து நாசமானது. தீ விபத்தில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் சேதம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.