விசைத்தறி அதிபர் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

பள்ளிபாளையம் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் கொலை வழக்கில் விசைத்தறி அதிபர் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-03-14 17:39 GMT
நாமக்கல்:-
பள்ளிபாளையம் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் கொலை வழக்கில் விசைத்தறி அதிபர் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
19 வயது பெண் பலாத்காரம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த விசைத்தறி அதிபர் சிவக்குமார். இவரிடம் பெண் ஒருவர் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார். அந்த பணத்துக்கான தவணை தொகையை செலுத்த அந்த பெண்ணின் 19 வயது மகள் சென்றார்.
அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த இளம்பெண்ணை, தனது நண்பர் ஆமையன் என்ற ரவியுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் ஆமையன் பாலியல் பலாத்காரம் செய்ததை சிவக்குமார் வீடியோ எடுத்து கடந்த 2010-ம் ஆண்டு இணையதளத்தில் வெளியிட்டார்.
கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் கொலை
இதனால் மனம் உடைந்த அந்த இளம்பெண், பள்ளிபாளையம் அக்ரஹாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக இருந்து வந்த வேலுச்சாமி (வயது 38) என்பவரிடம் நடந்த விவரங்களை கூறினார். உடனே வேலுச்சாமி சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்துக்கொண்டு பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையதளத்தில் உள்ள வீடியோ காட்சிகளை நீக்கம் செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. பின்னர் வீட்டுக்கு சென்ற வேலுச்சாமியை போகும் வழியில் ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இச்சம்பவம் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந் தேதி நடந்தது.
7 பேர் கைது
இது தொடர்பாக பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த கொலை வழக்கில் சிவக்குமார் (28), ராஜ்கமல் (30), மிலிட்டரி கணேசன் (48), அருண் என்கிற அருண்குமார் (22), அன்பு என்கிற அன்பழகன் (36), ஆமையன் என்கிற ரவி (32), பூபதி (30) என 7 பேரை கைது செய்தனர். பின்னர் வழக்கு விசாரணையின் போது அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதற்கிடையே ஆமையன் என்கிற ரவி கொலை செய்யப்பட்டார். பூபதி தலைமறைவாகி விட்டார்.
இதற்கிடையே இளம்பெண் பாலியல் தொடர்பான வழக்கு தனியாகவும், வேலுச்சாமி கொலை வழக்கு தனியாகவும் நடந்து வந்தது. இளம்பெண் பாலியல் வழக்கில் நாமக்கல் மகளிர் கோர்ட்டில் சிவக்குமாருக்கு கடந்த 2020-ம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
5 பேருக்கு ஆயுள் தண்டனை
இதேபோல் வேலுச்சாமி கொலை வழக்கும் இதே கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் திருமலைராஜன் ஆஜராகி வாதிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை முடிந்து சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட சிவக்குமார், ராஜ்கமல், மிலிட்டரி கணேசன், அருண் என்கிற அருண்குமார், அன்பு என்கிற அன்பழகன் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கொலை மற்றும் சதி திட்டம் தீட்டுதல் என இரு பிரிவுகளில் தனித்தனியே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும், ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவ்வழக்கில் பூபதி மீதான குற்றச்சாட்டு தனியாக பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்