குண்டு வீசியதில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குடிநீர் கிடைக்காமல் ஐஸ்கட்டிகளை சூடுபடுத்தி குடித்தோம் உக்ரைனின் இருந்து ஊர் திரும்பிய மாணவி உருக்கம்
குண்டு வீசியதில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குடிநீர் கிடைக்காமல் ஐஸ்கட்டிகளை சூடுபடுத்தி குடித்தோம் என்று உக்ரைனில் இருந்து ஊர் திரும்பிய அரூர் மருத்துவ மாணவி உருக்கமாக கூறினார்.
அரூர்:
குண்டு வீசியதில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குடிநீர் கிடைக்காமல். ஐஸ்கட்டிகளை சூடுபடுத்தி குடித்தோம் என்று உக்ரைனில் இருந்து ஊர் திரும்பிய அரூர் மருத்துவ மாணவி உருக்கமாக கூறினார்.
ரஷியா- உக்ரைன் போர்
ரஷியா- உக்ரைன் போர் காரணமாக அங்கு மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் மத்திய அரசால் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் நாசன்கொட்டாய் பகுதியை சேர்ந்த மருத்துவ மாணவி கவிநிலவு (வயது 20) உக்ரைன் நாட்டில் சுமி என்ற இடத்தில் மருத்துவம் படித்து வருகிறார். இவர் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்த மாணவியை பெற்றோர் கட்டி தழுவி வரவேற்றனர்.
பின்னர் இதுகுறித்து மாணவி கூறியதாவது:-
உக்ரைன் நாட்டின் சுமியில் மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தேன். ரஷியா,உக்ரைன் மீது போர் தொடுத்ததால், 6-வது மாடியில் தங்கியிருந்த நான் சக மாணவிகளுடன் இரவில் பதுங்கு குழியில் தங்கி கொள்வோம். நாங்கள் இருந்த பகுதியில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தின் மீது கடந்த, 3-ந்தேதி ரஷியா ராணுவம் குண்டு வீசியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் குடிநீர் கிடைக்காமல் ஐஸ்கட்டிகளை சூடுபடுத்தி குடித்தோம்.
சந்தேகமாக இருந்தது
குண்டுவெடிப்பு மூலம் தண்டவாளம் தகர்க்கப்பட்டதால், சுமியில் இருந்து போல்டோ என்ற இடத்திற்கு ரெயிலில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஸ் மூலம் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நாங்கள் சுமியில் இருந்து புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, பஸ்சில் ஏறி அமர்ந்த போது அப்பகுதியில் குண்டு வெடித்தது. இதனால் நாங்கள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டோம்.
குண்டு வெடிப்புகளுக்கு இடையே சிக்கி தவித்த நாங்கள் உக்ரைனில் இருந்து, இந்தியா திரும்புவது சந்தேகமாக இருந்தது. பின்னர் பஸ் மூலம் போல்டோ என்ற இடத்திற்கு வந்து அங்கிருந்து டெல்லிக்கு வந்தோம். தொடர்ந்து தமிழகம் வந்த என்னை அரசு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.