மயில்களின் சரணாலயமாக மாறி வரும் கொள்ளிடம் ஆற்றங்கரை வனப்பகுதி

மயில்களின் சரணாலயமாக கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதி மாறி வருகிறது. அங்கு மயில்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-03-14 18:30 GMT
கொள்ளிடம்:-

மயில்களின் சரணாலயமாக கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதி மாறி வருகிறது. அங்கு மயில்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  

கொள்ளிடம் ஆற்றங்கரை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் சரஸ்வதிவிளாகம், கொண்ண காட்டுப்படுகை, கீரங்குடி, பாலூரான் படுகை, மேலவாடி, கீழவாடி, பனங்காட்டான்குடி, வடரங்கம், நாதல்படுகை, திட்டுபடுகை, முதலைமேடு, முதலைமேடுத்திட்டு, நாணல்படுகை, அளக்குடி, எடமணல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. 
இந்த கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராம பகுதிகளிலும், அதையொட்டி உள்ள வனப்பகுதியிலும் கடந்த 10 ஆண்டுகளாக மயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

சரணாலயமாக...

10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வனப்பகுதியில் ஒரு மயிலை கூட பார்க்க முடியாது. ஆனால் இன்று நிலைமை மாறி பொதுப்பணித்துறை, வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதியில் மயில்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவதை காண முடிவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகிறார்கள். 
மயில்கள் இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளை வளர்ப்பதற்கு வசதியாக கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதி உள்ளது. இதனால் மயில்கள் இந்த பகுதியை விரும்பி, அதிக எண்ணிக்கையில் வசித்து வருவதாகவும், கொள்ளிடம் ஆற்றங்கரை வனப்பகுதி மயில்களின் சரணாலயமாக மாறி வருவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். 

வேட்டையாடப்படுவதை தடுக்க...

இந்த நிலையில் சிலர் மயில்களை வேட்டையாடி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே எந்த விதத்திலும் மயில்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மயில்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்