ஆழித்தேரோட்ட விழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூர்;
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
ஆழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி
முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறியதாவது
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டமானது நாளை (இன்று) காலை 8.10 மணியளவில் வடம்பிடித்து தொடங்கி வைக்கப்படுகிறது. தேரோட்டத்தையொட்டி 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 14 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 47 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மருத்துவக்குழுவினர்
மேலும் 4 தாசில்தார்கள், 9 வருவாய்த்துறை பணியாளர்களும் பணியில் ஈடுபடுகின்றனர். நகராட்சி சார்பில் 270 பணியாளர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்வதுடன், கழிவறை, குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. 13 உதவி டாக்டர்கள், 6 சுகாதார ஆய்வாளர், 2 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன், உதவி கலெக்டர் பாலசந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) மோகனசுந்தரம், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் செல்வகுமார், கோவில் செயல் அலுவலர் கவிதா ஆகியோர் இருந்தனர்.