‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
பழுதான சாலை
கிணத்துக்கடவு அருகே உள்ள கல்லாபுரத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் ரோடு நீண்ட நாட்களாக பழுதடைந்து இருக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அவ்வப்போது அவர்கள் விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சிவக்குமார், கல்லாபுரம்
குதிரைகளால் ஏற்படும் விபத்து
கோவை புட்டு விக்கி சாலை உள்ளிட்ட பல இடங்களில் சாலை யில் குதிரைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் குதிரைகள் திடீரென்ற ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்வதால், வாகன ஓட்டிகள் மீது பாய்கிறது. இதனால் விபத்துகளும் நடந்து வருகின்றன. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடிக்க வேண்டும்.
அலாவுதீன், செல்வபுரம்.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
பொள்ளாச்சி ரெயில்நிலையத்தில் இருந்து கோவை, பாலக்காடு, மதுரை, பழனி உட்பட பல இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் இந்த ரெயில் நிலையத்துக்கு மிகக்குறைவான பஸ்கள் மட்டுமே இயக்கப் படுகிறது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு பஸ் நிலையத்தில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
செல்வஜோதி, பொள்ளாச்சி.
சிக்னலில் இடையூறு
கோவை அவினாசி ரோட்டில் ஏராளமான சிக்னல் உள்ளது. இதில் ஹோப்ஸ்காலேஜ் சிக்னலில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அவர்கள் சிக்னலில் வாகனங் கள் நின்றதும், வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுக்கிறார்கள். பின்னர் பச்சை நிற விளக்கு ஒளிர்ந்ததும் அவர்கள் அங்கிருந்து செல்வது இல்லை. போக்குவரத்துக்கு இடையூறாக நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிக்னலில் பிச்சை எடுப்பவர்களை அழைத்துச்சென்று பராமரிக்க வேண்டும்.
கருப்புச்சாமி, கருமத்தம்பட்டி.
நிழற்குடை வேண்டும்
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் தனியார் நகைக்கடை முன்பு பயணிகள் காத்திருக்க நிழற்குடை இருந்தது. பாலம் கட்டுமான பணிக்காக அந்த நிழற்குடை அகற்றப்பட்டது. தற்போது பாலம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் அங்கு நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு உடனடியாக பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
கோபாலகிருஷ்ணன், கோவை.
வாகன ஓட்டிகள் அவதி
கோவை மாநகராட்சி 61-வது வார்டுக்கு உட்பட்ட கள்ளிமடை பகுதியில் 2 மற்றும் 3-வது வீதி உள்ளது. இந்த வீதியை இணைக்க பாதை வழி இருக்கிறது. ஆனால் இன்னும் அங்கு பாதை போடப்படவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அங்கு புதிய பாதை அமைக்க வேண்டும்.
மீனாட்சி சுந்தரம், கள்ளிமடை.
காற்று ஒலிப்பானால் விபத்து
கோவை மாநகர பகுதிக்குள் காற்று ஒலிப்பான் (ஏர்ஹாரன்) ஒலிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் யாரும் அதை பின்பற்றுவது இல்லை. இருசக்கர வாகனம் முதல் அரசு பஸ் வரை காற்று ஒலிப்பான் பொருத்தப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிக்னலில் காத்து நிற்கும்போது திடீரென்று பின்னால் வரும் பஸ்சில் காற்று ஒலிப்பானை ஒலிக்கும்போது அவர்கள் பயந்து விடுகிறார்கள். இதனால் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநாவுக்கரசு, கோவை.
மின்விளக்குகள் இல்லை
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அருகே சர்ச் வீதி உள்ளது. இங்கு இதுவரை மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து இருப்பதால், இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் இங்கு வடிகால் வசதியும் இல்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு மின்விளக்குகளை பொருத்த வேண்டும்.
கண்ணன், ஆனைமலை.
குப்பைக்கு தீ வைப்பு
கோவையில் இருந்து கோவை குற்றால அருவிக்கு செல்லும் வழியில் இருட்டுப்பள்ளம் உள்ளது. இங்குள்ள பஸ்நிறுத்தம் அருகே குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. அதில் குப்பைகள் நிறைந்து இருந்ததால் மர்ம நபர்கள் அதற்கு தீ வைத்து விட்டனர். இதனால் அங்கு புகை மண்டலமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவின்ரக்சன், காருண்யாநகர்.
தெருநாய்கள் தொல்லை
கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்துகிறது. இதனால் வேலை முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக கூட்டங்கூட்டமாக சுற்றும் தெருநாய்கள் இரவில் ஊளையிடுகிறது. இதனால் முதியவர்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரத்தினசிங், கோவை.