பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம்
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காரைக்குடி அருகே உள்ள குன்றகுடி சண்முகநாதன் கோவிலில் நாளை மறுநாள் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
காரைக்குடி,
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காரைக்குடி அருகே உள்ள குன்றகுடி சண்முகநாதன் கோவிலில் நாளை மறுநாள் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழா
காரைக்குடி அருகே உள்ளது குன்றக்குடி. இங்கு பிரசித்தி பெற்ற சண்முகநாதன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் சண்முகநாதபெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
தேரோட்டம்
விழாவையொட்டி நாளை மறுநாள் (17-ந்தேதி) 9-ம் திருநாள் அன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் 18-ந்தேதி பங்குனி உத்திர தினத்தன்று காலை முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் அன்று மதியம் 12.15 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், மயிலாடும் பாறையில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.