கொடைக்கானல் வனப்பகுதியில் 6-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ
கொடைக்கானல் வனப்பகுதியில் 6-வது நாளாக காட்டுத்தீ பற்றி எரிந்தது
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதியில் ஆங்காங்கே மரங்கள், செடி, கொடிகளில் தீப்பிடித்தது. இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி பெருமாள் மலை, மச்சூர் ஆகிய பகுதிகளை ஒட்டிய வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
இதனால் சுமார் 500 ஏக்கரில் இருந்த மூலிகை செடிகள், மரங்கள் தீயில் எரிந்து நாசமானது. அதன்பிறகு நகரை ஒட்டியுள்ள சில வனப்பகுதியிலும், கூக்கால், பெருமாள்மலை உள்ளிட்ட வனப்பகுதியிலும் காட்டுத்தீ ஏற்பட்டது. தொடர்ந்து 5 நாட்களாக தீப்பற்றி எரிந்தது.
இந்தநிலையில் 6-வது நாளாக வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. குறிப்பாக நேற்று காலை வெள்ளைபாறை பகுதியிலும், மாலையில் பேத்துப்பாறை கிராமத்தின் எதிரே உள்ள வனப்பகுதியிலும் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. காட்டுத்தீ ஏற்பட்ட மலைப்பகுதி செங்குத்தான இடமாக இருப்பதால், தீயை அணைப்பதில் வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. அங்கு தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருவதால் அரியவகை மரங்கள், செடிகள் தீயில் கருகி நாசமாகி வருகின்றன.
வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் கொடைக்கானல் நகரை ஒட்டியுள்ள சில பகுதிகளிலும், மலைக்கிராமங்களிலும் புகைமூட்டம் பரவியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், நவீன முறையில் தீயை அணைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.