ஊட்டி அருகே 33 கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்கள் கொண்டாடிய விதைப்பு திருவிழா

ஊட்டி அருகே 33 கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்கள் விதைப்பு திருவிழாவை கொண்டாடினார்கள். அதில் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

Update: 2022-03-14 16:41 GMT
ஊட்டி

ஊட்டி அருகே 33 கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்கள் விதைப்பு திருவிழாவை கொண்டாடினார்கள். அதில் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். 

படுகர் இன மக்கள் 

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் ஏராளமான கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் வாழும் கிராமங்கள் அட்டி என்று அழைக்கப்படுகிறது. நீலகிரியில் மேற்குநாடு சீமை, பொறங்காடு சீமை, குந்தா சீமை, தொதநாடு சீமை ஆகிய 4 சீமைகளில் வாழ்ந்து வருகிறார்கள். 

படுகர் இன மக்கள் ‘தெவ்வ’ என்று அழைக்கப்படும் அறுவடை பண்டிகை மற்றும் ஹெத்தையம்மன் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். 

ஒவ்வொரு சீமையின் வழக்கப்படி, அறுவடை பண்டிகை, விதைப்பு திருவிழா, பூக்குண்ட திருவிழா போன்ற விழாக்களை பாரம்பரியம் மாறாமல் கொண்டாடி வருகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை விதைப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். 

விதைப்பு திருவிழா

ஊட்டி அருகே அப்புக்கோடு கிராமத்தில் ஈதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் படுகர் இன மக்களின் விதைப்பு திருவிழா  நடைபெற்றது.

 விழாவில் மேற்குநாடு சீமைக்கு உட்பட்ட மேலூர், கல்லக்கொரை, பிக்கோள், பாலகொலா, ஓசஹட்டி, நுந்தளா, கரிகல்வளை உள்பட 33 கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்கள் புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

விதைப்பு திருவிழாவையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், அவரை உள்ளிட்ட விதைகளை வைத்து பூஜை நடந்தது. இந்த பூஜையில் திரளானோர் கலந்துகொண்டனர். 

பாரம்பரிய நடனம்

கோவில் வளாகத்தில் அமர்ந்து ஹெத்தையம்மன் பக்தி பாடல்களை பாடினர். பின்னர் 33 கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்கள் கோவிலை சுற்றிலும், மைதானத்திலும் தங்களது பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, படுகர் இன மக்களின் மேற்குநாடு சீமை சார்பில், ஆண்டுக்கு ஒரு முறை முறைப்படி சிறப்பு பூஜை நடத்தி காணிக்கை செலுத்தி விதைப்பு திருவிழா கொண்டாடுகிறோம். விழாவில் மழை வேண்டியும், விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கவும் வேண்டப்பட்டது. மேலும் சிறப்பு பூஜை செய்த விதைகளை, செவ்வாய்க்கிழமை அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னால் பாரம்பரிய முறைப்படி விளைநிலங்களில் விதைப்போம் என்றார்.

மேலும் செய்திகள்