மக்களை தேடி மாமன்றம் புதிய திட்டம்
கம்பத்தில் வார்டுகளில் குறைகளை தீர்க்க மக்களை தேடி மாமன்றம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படுகிறது
கம்பம்:
கம்பம் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் நகராட்சி அலுலவகத்துக்கு நேற்று வந்தார். அங்கு நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் மக்களை தேடி மாமன்றம் என்ற புதிய திட்டத்தில் வாரந்தோறும் 3 வார்டுகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வார்டுகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று அங்கு அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளை கேட்டறிவார்கள். பொதுநல கோரிக்கைகளை 24 மணி நேரத்திலும், தனிப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து 60 நாட்களுக்குள்ளும் நிறைவேற்றி தரப்படும். மேலும் நகராட்சி நிர்வாகம் மூலம் செல்போன் எண் அறிவிக்கப்பட்டு, அதில் வாட்ஸ்-அப் குழு ஒன்று ஏற்படுத்தப்படும். அந்த குழுவில் நகராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் இடம் பெறுவார்கள். அந்த வாட்ஸ்-அப் எண்ணுக்கு பொதுமக்கள் தங்கள் குறைகளை புகாராக பதிவு செய்யலாம். அதன்பேரில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். அதில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் நகராட்சி தலைவரிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் 1-வது வார்டு கோம்பை சாலை மற்றும் 3-வது வார்டு சங்கிலி நகர், 32-வது வார்டு நந்தகோபால் சாமி நகர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நகராட்சி தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் நகராட்சி துணை தலைவர் சுனோதா செல்வகுமார், பொறியாளர் பன்னீர்செல்வம், உதவி பொறியாளர் சந்தோஷ் குமார், தி.மு.க. கம்பம் நகர செயலாளர் (வடக்கு) வக்கீல் துரைநெப்போலியன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.