திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு கோப்பைக்கான சிலம்பம் போட்டி

திருச்செந்தூரில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற தூத்துக்குடி அணி பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் நினைவு கோப்பையை தட்டிசென்றது.

Update: 2022-03-14 15:23 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ெவற்றிபெற்ற தூத்துக்குடி அணி பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு கோப்பையை தட்டிசென்றது.
சிலம்பம் போட்டி
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கத்தில் சிலம்பம் சவுத் இந்தியா சார்பில் 12-வது தேசிய அளவிலான சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2 நாட்களாக நடந்தது. சிலம்பு போட்டியில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
தூத்துக்குடி அணிக்கு கோப்பை
இந்த தேசிய அளவிலான சிலம்பு போட்டியின் தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் சிலம்பு போட்டியை தொடங்கி வைத்தார். இப்போட்டி 4 வயது முதல் 17 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. மேலும், வீரர்களின் தனித்திறமை போட்டி, தொடுதல் போட்டி மற்றும் ஆயுத விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டி நடந்தது. போட்டியில் பங்குபெற்ற அனைவருமே தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் தூத்துக்குடி மாவட்ட சிலம்பு அணியினர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு சிலம்பம் சவுத் இந்தியா தலைவர் மாஸ்டர் சண்முகசுந்தரம், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார். மேலும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை சிலம்பம் சவுத் இந்தியா செயலாளர் மாஸ்டர் கராத்தே டென்னிசன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்