மூலப்பொருட்களின் விலை உயர்வால் பாலிபேக் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது
மூலப்பொருட்களின் விலை உயர்வால் பாலிபேக் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது
திருப்பூர்:
மூலப்பொருட்களின் விலை உயர்வால் பாலிபேக் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
மூலப்பொருட்கள் விலை உயர்வு
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பாலிபேக் என்பது முக்கிய தேவையாக உள்ளது. பின்னலாடைகளை பேக்கிங் செய்வதற்கு பாலிபேக் மிகவும் முக்கியம். வெளிநாடு மற்றும் உள்நாட்டு சந்தைக்காக தயாரிக்கப்படும் ஆடைரகங்கள், துணிகளை பாதுகாப்பதில் பாலிபேக்கின் தேவை முக்கிய பங்காக உள்ளது.
பாலிபேக் தயாரிப்புக்கான மூலப்பொருட்களான பாலி புரொப்லீன், பாலி எத்திலீன் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளதால் கடந்த 15 நாட்களில் டன்னுக்கு ரூ.21 ஆயிரம் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 75 நாட்களில் மூலப்பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது உற்பத்தியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதன்காரணமாக பாலிபேக்கின் விலையும் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இது பின்னலாடை உற்பத்தியாளர்களை கலங்கச்செய்துள்ளது. நூல் விலை உயர்வால் சிரமப்பட்டு வந்த நிலையில் பாலிபேக்கின் விலையும் உயர்ந்துள்ளது கவலையடைய செய்துள்ளது. நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளது. பாலிபேக் விலை உயர்வும் பின்னலாடை உற்பத்தியாளர்களை பாதித்துள்ளது. இருப்பினும் ஆடைகளை தயாரித்து அனுப்புவதில் பாலிபேக் முக்கியத்துவம் என்பதால், விலை உயர்ந்த போதிலும் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
40 சதவீதம் விலை உயர்வு
இதுகுறித்து திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க (டிப்மா) தலைவர் சண்முகம் கூறியதாவது:-
திருப்பூரில் 200-க்கும் மேற்பட்ட பாலிபேக் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலிபேக் விற்பனையாளர்கள் உள்ளனர். மூலப்பொருட்களான பாலிபுரொப்லீன், பாலி எத்திலீன் ஆகியவற்றை இந்தியன் ஆயில், ரிலையன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்கிறோம். பாலிபேக் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது.
இதனால் பாலிபேக்குக்கு விலையை நிர்ணயம் செய்யமுடியவில்லை. முன்கூட்டியே ஆர்டர் கொடுத்தபோதிலும் மூலப்பொருட்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை. உற்பத்தி செலவு அதிகரிப்பு, மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பாலிபேக் உற்பத்தி குறைந்துள்ளது. மூலப்பொருட்கள் உயர்வுக்கு ஏற்ப பாலிபேக் விலை 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பாலி எத்திலீன், பாலி புரொப்லீன் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு குறையும்போது அதற்கேற்ப பாலிபேக் விலையும் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.