விவசாயியை கடத்திச்சென்று முத்திரை தாளில் கையெழுத்து வாங்கிய வாலிபர் கைது
ரூ.10 ஆயிரம் கடன் பாக்கிக்காக விவசாயியை கடத்திச்சென்று முத்திரை தாளில் கையெழுத்து வாங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தென்னடார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது52). விவசாயி. இவர் கத்தரிப்புலம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (30) என்பவரிடம் ரூ.1½ லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை திரும்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மீதி ரூ.10 ஆயிரத்தை விக்னேஸ்வரன் பலமுறை கேட்டும், ரத்தினம் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஸ்வரன், ரத்தினத்தை கடத்தி சென்று அவரிடம் முத்திரைத்தாளில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீமான் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.