ஆக்கிரமிப்பில் இருந்த 23 ஏக்கர் 24 சென்ட் கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்
ஆக்கிரமிப்பில் இருந்த 23 ஏக்கர் 24 சென்ட் கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்
திருப்பூர்:
திருப்பூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 23 ஏக்கர் 24 சென்ட் கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். இதன் மதிப்பு ரூ.23 கோடியாகும்.
ஆக்கிரமிப்பில் கோவில் நிலம்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா அக்ரஹார பெரியபாளையம் கிராமத்தில் உள்ள சர்க்கார் பெரியபாளையம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 13.29 சென்ட் புன்செய் நிலமும், இதே கோவிலுக்கு சொந்தமான ரூ.2 ேகாடி மதிப்பிலான 1.55 ஏக்கர் நிலமும், செங்கப்பள்ளி அழகுநாச்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 2 சென்ட் புன்செய் நிலமும், புத்தூர் பள்ளபாளையத்தில் உள்ள நடுப்பட்டி திருவேங்கடமுடையான் என்கிற சீனிவாசபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 5.38 ஏக்கர் புன்செய் நிலம், பல்லவராயன் பாளையத்தில் இரட்டைக்கிணறு பகவதியம்மன், மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் என மொத்தம் 23 ஏக்கர் 24 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.
ரூ.23 கோடி நிலம் மீட்பு
இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் நடராஜன் உத்தரவின் பேரில் அந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் ஆக்கிரமிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ஆக்கிரமிப்பாளர்கள் கோவில் நிலங்களை மீண்டும் ஒப்படைக்க முன் வந்தனர்.
அதன்படி உதவி ஆணையாளர் செல்வராஜ் தலைமையில் தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வாளர்கள், கோவில் செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் உதவியோடு நேற்று 23 ஏக்கர் 24 சென்ட் புன்செய் நிலம் மீட்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.23 கோடியாகும்.