‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-14 14:01 GMT
தெரு குழாய்களில் மீண்டும் தண்ணீர்

செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர் என்.ஜி.ஜி.ஓ நகர் பகுதியில் பாலாறு தண்ணீர் தெரு குழாய்களில் வருவதில்லை என்பது குறித்த செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் தெரு குழாய்களில் மீண்டும் தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகிழ்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் துரித நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு காரணமாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

எரியாத தெரு விளக்கு, எரிந்தது

சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள மின்கம்பத்தில் தெரு விளக்கு பல மாதங்களாக எரியாமல் இருந்தது தொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் எடுத்த உடனடி நடவடிக்கையால் தெரு விளக்கு சரி செய்யப்பட்டது. விரைந்து செயல்பட்ட மின்வாரிய ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தனர்.

மேம்பாலம் தடுப்பு சுவரில் விரிசல்

சென்னை மணலி புதுநகர் அருகில் உள்ளது நாப்பாளையம் கொசஸ்தலை ஆற்றுபாலம். இது சென்னை-மீஞ்சூர், பொன்னேரி, எண்ணூர், காமராஜர் துறைமுகம் என முக்கிய பகுதிகளை இணைக்கும் பாலமாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக கன்டெய்னர் வாகனங்கள் செல்லும் இந்த பாலத்தின் தரை பகுதி, சுற்றுசுவர் தடுப்பு பகுதி விரிசல் விட்டு காணப்படுகிறது. விபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொன்னுதுரை, மணலி புதுநகர்.



சிவப்பு விளக்கு இல்லாத சிக்னல்

சென்னை அரும்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் இருக்கும் வெங்காய மண்டி சிக்னலில் சிவப்பு விளக்கு எரிவதில்லை. எப்போதும் பச்சை விளக்கு மட்டுமே எரிகிறது. இதனால் இப்பகுதியில் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பெண்கள், குழந்தைகள், முதியோர் அதிகளவு கடக்கும் இந்த சிக்னலில் பொதுமக்கள் நலனுக்காக சிவப்பு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

- லதா, முகப்பேர்.

தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை மாதவரம் தெற்கு டெலிபோன் காலனியில் சாலையை ஒட்டியுள்ள உள்ள மழைநீர் வடிகால்வாயில் கடந்த சில மாதங்களாக திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையில் சைக்கிளிலில் செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதை பாதசாரிகள் தவறி கால்வாயில் விழும் ஆபத்து உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு தகுந்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

- சந்தானம், மாதவரம்.



கண்டுகொள்ளப்படாத கால்வாய்

சென்னை தண்டையார்பேட்டை ஹில்நகர், சுனாமி குவாட்டர்ஸ் காலனி எதிரே கால்வாய் தொட்டியானது கடந்த ஒரு மாதமாக திறந்த நிலையில் இருக்கிறது. யாரும் கண்டுகொள்ளவில்லை. நடைபாதை அருகே இருப்பதால் இரவு நேரங்களில் யாரேனும் தவறி விழும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுத்து கால்வாய் தொட்டியை சரி செய்து தர வேண்டும்.

- தெரு மக்கள்.

பொது நூலகம் தேவை

சென்னை ஆர்.கே.நகர் பகுதியிலுள்ள சுனாமி குடியிருப்பில் பொது நூலக வசதி இல்லை. கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அதிகளவு இருக்கும் இப்பகுதியில் பொது அறிவு வளரவும், சமூக மாற்றம் பெறவும், உலக நடப்புகளை தெரிந்து கொள்ளவும் பொது நூலகம் ஒன்றை பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அமைத்து தர வேண்டும்.

- சௌரி ராஜன், ஆர்.கே.நகர்.

சாலையில் தேங்கிய கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம் கொண்டபுரம் தெருவில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி அந்த பகுதியே அசுத்தமாக உள்ளது. மேலும் தேங்கி இருக்கும் கழிவுநீரை சுத்தப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியை கடக்கும் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டே கடந்து செல்கின்றனர். எனவே கழிவுநீரை சுத்தப்படுத்தி மேற்கொண்டு இந்த சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- சாலிராஜன், சமூக ஆர்வலர்.



ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

சென்னை உத்தண்டி பகுதியில் கடற்கரை அருகே உள்ள நீலக்கடல் தெருவில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியானது ஆபத்தான நிலையில் பழுதடைந்து துருபிடித்து காட்சியளிக்கிறது. இந்த மின் இணைப்பு பெட்டியில் கதவும் இல்லாமல் திறந்து கிடக்கிறது. மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.

- ஜமால், உத்தண்டி.

ஏரியின் நிறம் மாறியது என்ன?

காஞ்சீபுரம் மாவட்டம் பெருங்குடி ஓ.எம்.ஆர் 200 அடி சாலை அருகே தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி பின்புறம் இருக்கும் ஏரியில் உள்ள நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறி போயுள்ளது. ஏரி அருகே உள்ள சில நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து, இந்தபோக்கை தடுத்தி நிறுத்தி நீர்நிலையை காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள், பெருங்குடி.



மேலும் செய்திகள்