அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
கொடைரோட்டில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது
கொடைரோடு:
கொடைரோடு அருகேயுள்ள அழகம்பட்டியை சேர்ந்த முருகன் மகன் முத்துக்காளை (வயது 20), பெரியசாமி மகன் ராமன்(23). இவர்கள் 2 பேரும் கோவையில் இருந்து கொடைரோடுக்கு அரசு பஸ்சில் வந்தனர். பஸ்சில் கண்டக்டராக ஜெயராஜ் (55) என்பவர் இருந்தார். அவர் 2 பேரிடமும் டிக்கெட் எடுக்குமாறு கூறினார். அப்போது 2 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கண்டக்டரிடம் தகராறு செய்து கொண்டே வந்தனர்.
இந்நிலையில் கொடைரோடு சுங்கச்சாவடிக்கு பஸ் வந்தது. அப்போது அவர்கள் 2 பேரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் பஸ்சை வழி மறித்து கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களது நண்பரான சி.புதூரை சேர்ந்த மாதவன் என்ற நடராஜனும்(21) அங்கு வந்து தகராறு செய்தார். பின்னர் அவர்கள் டிரைவர் அருகே இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகிேயார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்காளை உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.