ஆம்பூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து தொழிலாளி பலி
ஆம்பூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து தொழிலாளி பலியானார்
ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த காட்டுக்கொல்லை பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணி நடந்தது. இதைத்தொடர்ந்து உடைக்கப்பட்ட பாறைகளில் இருந்து ஜல்லி உடைப்பதற்காக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெருமாள் (வயது 51) மற்றும் நவீன் ஆகியோர் சென்றனர். அப்போது வெடி வைக்கப்பட்டதில் விரிசல் ஏற்பட்டிருந்த ஒரு பாறை திடீரென சரிந்து விழுந்தது. இதன் அடியில் பெருமாள் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். நவீன் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் நவீனை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் பாறைக்கு அடியில் சிக்கியிருந்த பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பார்வையிட்டார்.. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வில்வநாதன் எம்.எல்.ஏ. மற்றும் மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று படுகாயம் அடைந்த நவீனிடம் நலம் விசாரித்தனர்.