ஆலங்காயம் அருகே 21 நாட்டு வெடிகுண்டுகள் பாதுகாப்பாக வெடிக்க செய்து அழிப்பு
ஆலங்காயம் அருகே காப்புக்காட்டில் கைப்பற்றப்பட்ட 21 நாட்டு வெடிகுண்டுகளை பள்ளம்தோண்டி பாதுகாப்பாக வெடிக்க செய்து அழித்தனர்.
வாணியம்பாடி
ஆலங்காயம் அருகே காப்புக்காட்டில் கைப்பற்றப்பட்ட 21 நாட்டு வெடிகுண்டுகளை பள்ளம்தோண்டி பாதுகாப்பாக வெடிக்க செய்து அழித்தனர்.
21 நாட்டு வெடிகுண்டுகள்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள நரசிங்கபுரம் காப்புக்காட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் வன விலங்குகளை வேட்டையாட மர்ம நபர்கள் நாட்டு வெடி குண்டுகளை மறைத்து வைத்திருந்தனர். இதனை அந்தவழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் கண்டுபிடித்து 21 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி வனத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
இந்தநிலையில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் மற்றும் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர் குழு ஆய்வாளர்கள் ஜெயராமன், தங்கேஷ்வரன் தலைமையிலான வெடிகுண்டு நிபுணர்குழு மற்றும் போலிசார், நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்து அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வெடிக்க செய்தனர்
இதற்காக நரசிங்கபுரம் காப்புக்காட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, கைப்பற்றப்பட்ட 21 நாட்டு வெடிகுண்டுகளை அதில் போட்டு அங்கு பாதுகாப்பாக வெடிக்க செய்தனர்.
இந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்யும்போது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.