பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாளில் தீர்வு காணவேண்டும். அதிகாரிகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவு
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வுகாணவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார்.
திருப்பத்தூர்
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வுகாணவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார்.
குறைதீர்வு கூட்டம்
கொரோனா தொற்று, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
குறைவு தீர்வு முகாமில் பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 255 பேர் மனு கொடுத்தனர். ஜோலார்பேட்டை ஒன்றியம் வேட்டப்பாட்டு ஊராட்சியை சேர்ந்த மேல்நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் கடந்த 1.10.2020 முதல் 1.10.2021 வரை தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 13 பேர் மனு அளித்தனர்.
30 நாட்களில் தீர்வு
குறை தீர்வு நாள் கூட்டத்தில் இரண்டு கால்களும் பாதிப்படைந்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான சக்கரங்கள் பொருத்தப்பட்ட 6 ஸ்கூட்டர்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.
ஜோலார்பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வனிதா 3 சக்கர சைக்கிள் வேண்டி கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு 3 சக்கர சைக்கிளை கலெக்டர் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் முதல்-அமைச்சரின் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காண வேண்டும். தகுதி இல்லை எனில் அதற்கான காரணங்களை மனுதாரர்களிடம் தெரிவிக்க வேண்டும். மனுவை சேர்த்து வைக்ககூடாது.
வருவாய்துறை, சமூக நலத்துறையில் ஏராளமான மனுக்கள் நிலுவையில் உள்ளது. இதற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு இந்தமாத இறுதிக்குள் தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பானுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.