காவல் துறையினருக்கு சுய ஒழுக்கம் அவசியம். வேலூர் சரக டி.ஐ.ஜி. பேச்சு

காவல்துறையில் பணிபுரியும் அனைவருக்கும் சுய ஒழுக்கம் மிகவும் அவசியம் என்று வேலூரில் நடந்த பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.;

Update: 2022-03-14 12:48 GMT
வேலூர்

காவல்துறையில் பணிபுரியும் அனைவருக்கும் சுய ஒழுக்கம் மிகவும் அவசியம் என்று வேலூரில் நடந்த பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.

8 மாத பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் 2-ம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்ட 9,831 பேருக்கு 8 மாத பயிற்சி வகுப்புகள் தொடங்கின. வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பெண் போலீசாருக்கும், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உள்ள பயிற்சி பள்ளியில் ஆயுதப்படைக்கு தேர்வான 200 ஆண் போலீசாருக்கும், காட்பாடியை அடுத்த சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை பயிற்சி பள்ளியில் 150 ஆண் போலீசாருக்கும் பயிற்சி வகுப்புகள் தொடங்கின.

வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சிக்கு காவலர் பயிற்சி பள்ளி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், பயிற்சி பள்ளி முதல்வர் அசோக்குமார், இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி, கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமை தாங்கி பேசியதாவது:-

சுய ஒழுக்கம் அவசியம்

காவலர் பணியில் சேர்ந்துள்ள நீங்கள் அனைவரும் பொதுமக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். இங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் தான் உங்களை திறம்பட உருவாக்கும். பணியில் சேர்ந்த பின்னர் பொதுமக்களிடம் வெறுப்பு காட்டாமல் அனைவரையும் சமமாக மதித்து பணியாற்ற வேண்டும்.

போலீசார் எந்த செயலில் ஈடுபட்டாலும் வெளியே தெரிந்து விடும். எனவே யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்ற வேண்டும். காவல்துறையில் பணிபுரியும் அனைவருக்கும் சுய ஒழுக்கம் மிகவும் அவசியம். தேவையில்லாமல் எதுவும் பேசக்கூடாது. தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடக் கூடாது. பெண் போலீசார் தங்கள் உடலை பேணி பாதுகாக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் மற்ற அனைவரையும் கவனிக்க முடியும். சமுதாயத்தில் பெண்கள் மிகவும் முக்கியமானவர்கள். பெண்கள் தங்கள் குடும்பத்தை கவனித்துக்கொண்டு, வேலையும் சிறப்பாக செய்ய வேண்டும்.

இவ்வாறு டி.ஐ.ஜி கூறினார்.

மேலும் செய்திகள்