தூத்துக்குடியில் போக்குவரத்து பூங்கா, கோளரங்கம் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
தூத்துக்குடியில் ரூ.57 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பூங்கா, கோளரங்கம் உள்ளிட்டவற்றை நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரூ.57 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பூங்கா, கோளரங்கம் உள்ளிட்டவற்றை நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்று பார்வையிட்டனர்.
ரூ.57.10 கோடியில்...
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் வ.உ.சி. கல்லூரி முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.57.10 கோடி மதிப்பீட்டில் மானுடவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, கோளரங்கம், போக்குவரத்து பூங்கா ஆகியவை ஒரே பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களை கடந்த ஜனவரி மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
அதனை தொடர்ந்து இந்த பூங்காவில் சில சிறிய பணிகள் இருந்ததால், அவைகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு, நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. பூங்காக்கள் மற்றும் கோளரங்கத்தை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவியர் நேற்று பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியரை வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
கோளரங்கம்
4-டி காணொலி, 5.1 ஆடியோ சிஸ்டம் மற்றும் குளிர்சாதன வசதியுடன் கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ, மாணவியருடன் அமைச்சர், மேயர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் அமர்ந்து ஆர்வமுடன் பார்வையிட்டனர். கோள்களை பற்றி காட்சிகள் தத்ரூபமாக இடம் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே விளக்கம் இருப்பதால், மாணவ, மாணவியருக்கு புரியும் வகையில் தமிழில் விளக்கம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. போக்குவரத்து குறியீடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன போக்குவரத்து பூங்காவில் ஒவ்வொரு குறியீடுகள் குறித்தும் மாணவ, மாணவியருக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விளக்கி கூறினர்.
மானுடவியல் பூங்காவில் இந்தியாவில் வாழ்ந்த 12 பூர்வகுடி இன மக்களின் கலாச்சாரம், தொழில், வாழ்வியல் முறைகளும், ஐந்திணை பூங்காவில் 5 வகை நில அமைப்புகளும் காட்சிப்படுத்தப்பட் டுள்ளன. இவைகளை மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
ஒருவாரம் இலவசம்
பின்னர் அமைச்சர் கூறுகையில், பள்ளி மாணவ-மாணவர்களுக்கு இளம் வயதிலேயே சாலை விதிகளை கற்றுக் கொடுப்பதற்கு இந்த போக்குவரத்து பூங்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அறிவியல் பூங்காவும் மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்து பூங்காவை நாள் முழுவதும் கண்டுகளிக்கலாம். ஒருவாரம் இலவசமாக அனுமதிக்கபடுவார்கள். கோளரங்கத்தை மாலை 5 முதல் இரவு 7 மணி வரை பார்வையிட அனுமதிக்க படுவார்கள் என்று கூறினார்.
மேலும் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியை விரைவாக முடிக்கவும் அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து எடுத்து கூறி உள்ளோம். இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர் சரவணன், நகர்நல அலுவலர் அருண்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.