மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 53 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 53 லட்சம் பேர் பயன் அடைந்து உள்ளனர் என்று, திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திருவண்ணாமலை
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 53 லட்சம் பேர் பயன் அடைந்து உள்ளனர் என்று, திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தொடக்க விழா
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலையில் முதன்முதலில் அரசு மருத்துவக்கல்லூரி வேண்டும் என போராடி அமைச்சர் எ.வ.வேலு அரசு மருத்துவமனை பெற்றுத் தந்தார்.
அவரது சேவை மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி இல்லை. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது முன்னால் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆசையாகும்.
6 மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்க எளிதில் அனுமதி வாங்கி விடுவோம். ஆனால் கட்டிடம் கட்டித்தர வேண்டியது பொதுப்பணித் துறை அமைச்சர் தான்.
அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கல்லூரியில் படித்தோம் என்று உலக அளவில் புகழை மாணவர்கள் பரப்ப வேண்டும். இந்த மருத்துவமனைக்கு பெருமையைப் பெற்றுத் தரவேண்டும்.
இறப்பு இல்லை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று மிகவும் குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக இறப்பு என்பது இல்லவே இல்லை. இன்றைய தொற்று பாதிப்பு 95 ஆக உள்ளது.
சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தொற்று அதிகரிக்கிறது. கேரள மாநிலத்திலும் அதிகரித்து வருகிறது. எனவே அதை தடுக்க மக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும்.
மாணவர்களும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் பசுமை பரப்பளவு என்பது 23.9 சதவீதமாக உள்ளது.
இதை அதிகரிக்க வேண்டும். திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு இதற்கான முயற்சி மேற்கொள்வது பாராட்டுக்குரியது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன் அடந்துள்ளனர்.
இதன் மூலம் இதுவரை 53 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டம் உலகில் யாரும் அறிமுகப்படுத்தாத திட்டமாகும்.
உயிரிழப்பு குறைவு
விபத்தின்போது காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்ற திட்டத்தால் உயிரிழப்பு குறைந்துள்ளது.
காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறலாம் என்ற திட்டம் மகத்தானது.
அதை தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்கும் மருத்துவ காப்பீடு திட்டம் பயன்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு ரூ.27 கோடியே 71 லட்சத்து 51 ஆயிரத்து 72 செலவு ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் விபத்து மரணங்கள் தமிழகத்தில் குறைந்துள்ளது.
புகழ் பெறும் மருத்துவர்களாக...
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருதய பிரிவு தொடங்கப்பட வேண்டும் என அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்கப்பட உள்ளது.
மருத்துவ கல்வி என்பது பெரிய கனவாக உள்ளது. சாதாரண குடும்பத்திலிருந்து வந்த நான் மருத்துவம் படித்தேன். அருணை மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்கள் உலக புகழ் பெறும் மருத்துவர்களாக மாறினார்கள் என்ற நிலை வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
மனிதன் சாதிக்க வேண்டுமென்றால் இலக்கு என்பது அவசியமாகும். உழைப்பும் வேண்டும். நீங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்ற இலக்கு ஒன்றை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
இலக்கு இல்லை என்றால் அனைவரும் சோம்பேறி ஆகிவிடுவார்கள். எனவே நான் எனது தாரக மந்திரமாக உழைப்பவரே உயர்ந்தவர் என்று கருதுகிறேன்.
அரசு மருத்துவ கல்லூரி
திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்னிடம் தெரிவித்தார்.
அப்போது நான் திருவண்ணாமலைக்கு அரசு மருத்துவக்கல்லூரி வரவேண்டும் என்று கூறினேன்.
அதன் காரணமாக தான் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை அமைக்கப்பட்டது. எனினும் எனக்குள் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என விருப்பம் இருந்தது. இந்த விருப்பம் தற்போது நிறைவேறி உள்ளது.
இங்கு மருத்துவம் படிக்க மாணவர்கள் பலர் வந்துள்ளனர். நீங்கள் அனைவரும் நீட் தேர்வில் வெற்றி பெற்று இங்கு வந்துள்ளீர்கள்.
அதற்கு உங்கள் உழைப்பும் ஒரு காரணமாகும். நீங்கள் பள்ளியில் படிக்காத பாடத்திட்டத்தை படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றதற்காக உங்களுக்கு பாராட்டுக்கள்.
சிறந்த மருத்துவர்கள்
இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளனர். நீங்கள் வருங்காலங்களில் சிறந்து விளங்கி அருணை மருத்துவக்கல்லூரிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
பல மொழிகள் கற்பது தவறில்லை. நாங்கள் இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். இந்தியை அல்ல. மருத்துவமனையில் சேர மனு போடும்போது சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
இதனால் மருத்துவம் படிக்க தடை ஏற்பட்டிருந்தது. அந்த நிலை மாறி உள்ளது.
மருத்துவப்படிப்பா?, பொறியியல் படிப்பா? இதில் எது உயர்ந்தது? என கேள்வி எழுந்தது. உயிர் கொடுக்கும் மருத்துவப்படிப்புதான் சிறந்தது.
பொறியியலில் சிறந்து விளங்குபவரின் உயிருக்கு ஆபத்து என்றால் அங்கு மருத்துவர் தான் உதவ முடியும்.
அதனாலேயே மருத்துவரை இறைவனுக்கு சமம் என்று நாம் ஒப்பிடுகிறோம். மாணவர்களை இந்த கல்லூரி நிர்வாகம் தாய், தந்தைபோல் அரவணைத்து பாதுகாக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன், ஜோதி, வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், ப.கார்த்திகேயன், முன்னாள் எம்.பி. வேணுகோபால், மாவட்ட மருத்துவ அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், மருத்துவ மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.