பங்குனி உத்திர விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும்

பங்குனி உத்திர விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-03-14 12:19 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் பங்குனி உத்திர விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி பொது செயலாளர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் நகரில் அமைந்துள்ளது புகழ்வாய்ந்த வழிவிடுமுருகன் கோவில். ஆண்டு தோறும் இந்த கோவிலில் பங்குனி உத்திரபெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலின் 82-வது பங்குனி உத்திரபெருவிழா கடந்த 9-ந் தேதி காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 
ஆலயத்தில் அமைந்துள்ள கொடிகம்பத்தில் விழாவை யொட்டி கொடி ஏற்றப்பட்டு முருகபெருமானுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. வருகிற 18-ந் தேதி பங்குனி உத்திரபெருவிழா நடைபெற உள்ளது. இதேபோல மாவட்டத்தில் ராமேசுவரம், பரமக்குடி, குயவன்குடி போன்ற இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர பெருவிழா பக்திபரவசத்துடன் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவிற்கு அந்த மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்திலும் இந்த ஆண்டு பங்குனி உத்திர பெருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்