குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தனது கழுத்தையும் அறுத்து கொண்ட கணவர்
குடும்பத்தகராறு காரணமாக கணவர், மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தனது கழுத்தையும் அறுத்து கொண்டார்.
தகராறு
செங்கல்பட்டு அருகே உள்ள திருமணி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது வீட்டில் கடந்த 3 மாத காலமாக மதுராந்தகம் தாலுகா, படாளம் ஊராட்சியை சேர்ந்த ராஜேஷ் (வயது 36) என்பவர் தனது மனைவி ரேகா (30) மற்றும் ஒரு வயது பெண் குழந்தை தேவதர்ஷினியுடன் வாடகைக்கு தங்கி இருந்தார். ராஜேஷுக்கும் அவரது மனைவி ரேகாவுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வழக்கம் போல கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
கொலை முயற்சி
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த கத்தியால் தனது மனைவி ரேகாவின் பின் கழுத்திலும், இடது கையிலும் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
பின்னர் தன்னைத்தானே காய்கறி நறுக்கும் கத்தியால் ராஜேஷ் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த காயத்துடன் இருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த கணவன், மனைவி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்பர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.