காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் 63 நாயன்மார்களுடன் வீதியுலா

பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவையொட்டி காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் 63 நாயன்மார்களுடன் வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2022-03-14 11:44 GMT
63 நாயன்மார்கள் வீதியுலா

உலக புகழ்பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் காஞ்சீபுரம் ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் காலை, மாலை இருவேளைகளிலும் ஏலவார்குழலியோடு, ஏகாம்பரநாதர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

அந்த வகையில் முக்கிய திருவிழாவாக 6-ம் நாளான நேற்று ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர், 63 நாயன்மார்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏகாம்பரநாதர் உற்சவர், ஏலவார்குழலி அம்பாளுடன் 63 நாயன்மார்களும் ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து 4 ராஜ வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

தீர்த்தவாரி திருவிழா

63 நாயன்மார்கள் வீதியுலாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இரவு வெள்ளி திருத்தேர் திருவிழா நடைபெற்றது.

முக்கிய விழாவாக வருகிற 18-ந் தேதி ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவமும், இரவு புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளி, 20-ந் தேதி தீ ர்த்தவாரி திருவிழாவும், 21-ந் தேதி 108 கலசாபிசேஷகமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் என். தியாகராஜன், முன்னாள் மேலாளர் சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்