தொல்லுயிர் படிமங்களின் பூங்கா அமைக்க வலியுறுத்தல்

தொல்லுயிர் படிமங்களின் பூங்கா அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-03-13 22:34 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் உள்ள ஏரியில் கடந்த ஆண்டு டைனோசர் முட்டை என்ற பெயரில் கற்திரளைகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அம்மோனைட் என்ற கடல் தொல் உயிரினமும் கண்டறியப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் உள்ள ‘ஆனைவாரி ஓடை'யில் கல்மரம் ஒன்றும் கண்டறியப்பட்டது. கல்மரம் கண்டறிந்தபோது 8 அடி நீளமாக இருந்தது. கல் மரங்கள், கற்திரளைகள், அம்மோனைட் எனப்படும் மறைந்துவிட்ட கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் என மூன்று சிறப்பு வாய்ந்த தொல்லுயிர் அடையாளங்கள் குன்னம் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கண்டறியப்பட்ட தொல்லுயிர் படிமங்கள் யாவும் 12 கோடி முதல் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதி கடலாக இருந்தது என்பதற்கு உறுதியான சான்றுகள் என புவியியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனவே கடந்த ஆண்டு கற்திரளைகள் கண்டறியப்பட்ட குன்னம் ஏரியை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். கல்மரங்கள் கண்டறியப்பட்ட ஆனைவாரி ஓடையை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மேலும் அந்தூர், வெண்மணி, ஒதியத்தில் உள்ள ஓடைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்திய புவியியல் துறையின், தொல்லுயிர் பூங்காக்களின் பாதுகாப்பு துறை மூலமாக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
பல கோடி ஆண்டுகள் பழமையான தொல்லுயிர் படிமங்களை பாதுகாக்கும் வகையில் குன்னம் பகுதியில் ஒரு தொல்லுயிர் படிமங்களின் பூங்கா அமைத்து காட்சிப்படுத்தி வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு தொல்லுயிர் படிமங்கள் பாதுகாப்பு குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்