ஆட்டோவில் கடத்தி வந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஆட்டோவில் கடத்தி வந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
ரேஷன் அரிசி மூட்டைகள்
பெரம்பலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த பயணிகள் ஆட்டோ ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
இதில், அந்த ஆட்டோவில் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்படும் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஆட்டோவை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசாா் விசாரணை நடத்தினர்.
கைது
இதில் அவர், பெரம்பலூர் 13-வது வார்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்த காந்தி மகன் செல்வம்(வயது 30) என்பதும், அவர் அந்த ரேஷன் அரிசியை விற்பனை செய்வதற்கு கடத்தி சென்றதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் செல்வத்தை கைது செய்த போலீசார், 450 கிலோ இலவச ரேஷன் அரிசியையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.