கோபி அருகே குடிபோதையில் தந்தை மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்த மகன் கைது

கோபி அருகே குடிபோதையில் தந்தை மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-13 22:06 GMT
கடத்தூர்
கோபி அருகே குடிபோதையில் தந்தை மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்த மகனை போலீசார் கைது செய்தனர். 
குடிப்பழக்கம்
கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 65). இவருடைய மனைவி கமலா (56). இவர்களுக்கு கணேசன் (36), திருமுருகன் (33) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணேசன் திருமணம் செய்து தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். திருமுருகன் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள சலூன் கடையில் முடி திருத்தும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.  திருமுருக னுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தந்தை கிருஷ்ணசாமியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். 
கைது
இந்த நிலையில் சம்பவத்தன்று திருமுருகன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது அவருக்கும், கிருஷ்ணசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தகராறு முற்றியதில் திருமுருகன் ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து கிருஷ்ணசாமி மீது ஊற்றி தீ வைத்தார். இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருமுருகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்