கோடை வெயில் சுட்டெரிப்பதால் பண்ணாரி வனப்பகுதியில் தண்ணீர் இல்லாத தொட்டிகளை ஏக்கத்துடன் பார்த்து செல்லும் புள்ளிமான்கள்; குடிநீர் நிரப்ப சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கோடை வெயில் சுட்டெரிப்பதால் பண்ணாரி வனப்பகுதியில் தண்ணீர் இல்லாத தொட்டிகளை புள்ளிமான்கள் ஏக்கத்துடன் பார்த்து செல்கின்றன. எனவே தொட்டியில் குடிநீரை நிரப்ப சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-03-13 21:47 GMT
சத்தியமங்கலம்
கோடை வெயில் சுட்டெரிப்பதால் பண்ணாரி வனப்பகுதியில் தண்ணீர் இல்லாத தொட்டிகளை புள்ளிமான்கள் ஏக்கத்துடன் பார்த்து செல்கின்றன. எனவே தொட்டியில் குடிநீரை நிரப்ப சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
வெயில் சுட்டெரிக்கிறது
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்ெடருமை, புள்ளிமான்கள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மழைக்காலங்களில் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கும். மேலும் வனப்பகுதியில் ஏராளமான வனக்குட்டைகள், குளங்கள் பல உள்ளன. இதனால் வனவிலங்குகள் செடி, கொடிகள் போன்றவற்றை தின்றுவிட்டு ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குடித்து தங்களுடைய தாகத்தை தீர்த்து கொள்ளும். 
தற்போது கோடை காலம் என்பதால் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் காய்ந்து கருகி உள்ளன. மேலும் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. 
தண்ணீரை தேடி...
குறிப்பாக பண்ணாரி வனப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து சருகாகி விட்டன. அதுமட்டுமின்றி வடவள்ளி, புதுக்குயானூர் ஆகிய பகுதிகளில் உள்ள வனக்குட்டைகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய்விட்டன. கோடை வெயில் அதிகமாக இருப்பதால் வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி வனப்பகுதியில் அலைகின்றன. மேலும் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே உள்ள வனப்பகுதியில் புள்ளிமான்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன. 
இந்த புள்ளிமான்கள் தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பண்ணாரி வனப்பகுதியில் 6 இடங்களில் தொட்டிகள் அமைத்து கோடை காலத்தில் அதில் வனத்துறையினர் குடிநீர் ஊற்றி வந்தனர். 
தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும்
இந்த தண்ணீர் தொட்டியில் புள்ளிமான்கள் மட்டுமின்றி காட்டெருமைகளும், வனப்பகுதியில் உள்ள பறவைகளும் தண்ணீர் குடித்து வந்தன. 
ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கி ஒரு மாதம் ஆகியும் 6 தொட்டிகளிலும் வனத்துறையினர் தண்ணீர் ஊற்றவில்லை. இதனால் தண்ணீர் இல்லாமல் இந்த தண்ணீர் தொட்டிகள் வறண்டு கிடக்கிறது. அடிக்கடி தண்ணீர் தேடி வரும் புள்ளிமான்கள் இங்குள்ள தொட்டியில் நீர் இல்லாததால் தாகம் தீர்க்க முடியாமல் ஏக்கத்துடன் செல்கின்றன. எனவே புள்ளிமான்களின் தாகத்தை தீர்க்க வனப்பகுதியில் உள்ள தொட்டியில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்