சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் டேங்கர் லாரி மோதி பெண் சாவு-கணவருடன் மோட்டார் சைக்கிளில் உழவர் சந்தைக்கு வந்த போது பரிதாபம்
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் டேங்கர் லாரி மோதி பெண் பலியானார். கணவருடன் மோட்டார் சைக்கிளில் உழவர் சந்தைக்கு வந்த போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் டேங்கர் லாரி மோதி பெண் பலியானார். கணவருடன் மோட்டார் சைக்கிளில் உழவர் சந்தைக்கு வந்த போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
கணவன்- மனைவி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 50). இவருடைய மனைவி லட்சுமி (45). கணவன்- மனைவி இருவரும் சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் பூக்கடை நடத்தி வருகின்றனர்.
நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கணவன்- மனைவி இருவரும் பூக்களை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தாதகாப்பட்டி உழவர்சந்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் வந்த போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி, இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட கணவன்- மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். லட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார். தனது கண்முன்னே மனைவி இறந்ததை கண்டு கிருஷ்ணமூர்த்தி கதறி அழுதார். அங்கிருந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
டிரைவர் கைது
மோட்டார் சைக்கிள் மோதிய டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. லாரியை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஷான்கான் (30) என்பவரை கைது செய்தனர். கிளீனர் மோகன்லால் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. டேங்கர் லாரி, ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் நகரில் இருந்து ஆசிட் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.