1 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம்; செவித்திறன் குறையுடையோருக்கான நலச்சங்கம் தீர்மானம்

ஒரு சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று செவித்திறன் குறையுடையோருக்கான நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-03-13 21:34 GMT
ஈரோடு
ஒரு சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று செவித்திறன் குறையுடையோருக்கான நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம்
ஈரோடு மாவட்ட செவித்திறன் குறையுடையோருக்கான நலச்சங்க கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் கே.மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.கே.மோகன்ராஜ், பொருளாளர் எஸ்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ்பாபு, பொதுச்செயலாளர் ஜெயசங்கர், தமிழ்நாடு காதுகேளாதோர் மற்றும் சமூக சங்க தலைவர் ராஜூ, தமிழ்நாடு காதுகேளாத மகளிர் சங்க செயலாளர் ஜெ.செல்வகுமாரி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
காத்திருப்பு போராட்டம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியாா் துறை பணிகளில் காதுகேளாதவா்களுக்காக உள்ள ஒரு சதவீத இட ஒதுக்கீட்டை ஈரோடு மாவட்டத்தில் அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். இளம் பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம், காதுகேளாதவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் கல்வி ஊக்கத்தொகையாக ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், பிரகாஷ்வேல், வஜ்ரவேல் முருகன், துவாரகாநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்